Thursday 23 February 2012

'ஜான்தோசை'



'ஜான்தோசை'




21 ஜனவரி 11, காலை 8:25 மணி அவசரமாக எனது மனைவி அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். எனது மகன் ஜான் தூங்கிக்கொண்டிருந்தான். 'நீங்க புறப்படும்போது அவனைக் கூட்டிக்கொண்டுவந்து எனது அலுவலகத்தில் விட்டுவிடுங்கள்' என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள். பத்து மணிக்கு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய நான், தூங்கிக்கொண்டிருந்த எனது மகனை எழுப்பினேன், பல முறை தோற்று ஒரு வழியாக 10:30 மணிக்கு அவனை படுக்கையிலிருந்து எழுப்பி வெற்றி கண்டேன். தொடர்ந்து பல் துலக்க வைத்து, காலைக் கடன்களை செய்யவைத்து ஆடை அணிவித்தேன். சமயலறைக்குச் சென்று பாத்திரத்தில் இருந்த தோசை மாவை எடுத்து தோசை சுட்டு மகனுக்குக் கொடுத்தேன்; அவனோ சாப்பிட மனமின்றி, வேண்டாம் வேண்டாம் என்று தட்டிக் கொண்டேயிருந்தான். எனக்கோ அலுவலகத்திற்குக் கிளம்ப வேண்டும்; என்ன செய்வதென்று புரியாது விழித்தேன். சுடச் சுடச் தோசைகளைச் சுட்டு முதலில் நான் சாப்பிட்டு முடித்தேன். அவனோ வேண்டவே வேண்டாம் என அடம் பிடிக்க, அடிப்பதை விட்டு விட்டு அடுத்து என்ன செய்வது என யோசித்தேன். சட்டென எனது மகனிடம் 'ஜான் தோசை' வேண்டுமா என்று கேட்டேன் அவனுக்குப் புரியாததினால் மீண்டும் வேண்டாம் என்றே பதில் வந்தது. அவனை அழைத்துக் கொண்டு வந்து சமயலறையில் நாற்காலி ஒன்றினைப் போட்டு அதின் மேல் ஏற்றி, அப்பா இப்போது சுடும் தோசை உனக்குப் பிடிக்கும் என சொல்லி, ஆங்கில எழுத்தின்படி J O H N என தனித்தனியாக ஒவ்வொரு எழுத்து வடிவத்திலும் தோசையினைச் சுட்டுக் கொடுத்தேன். இடையிடையே பெரிய தோசையினையும் கொடுத்தேன்; தனது பெயரிலேயே தோசை சுடப்படுவதைக் கண்ட அவன் ஆசை ஆசையாக 'அப்பா இன்னொரு ஜான்தோசை, இன்னொரு ஜான்தோசை' என கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான். எனக்கும் எனது மகனுக்கும் இடையே நடந்த சுவையான இந்த நிகழ்வு என் மனதிற்கு இனித்தது. 

எவர்களை எப்படி அனுகவேண்டும் என்பதற்கு இது ஓர் நல்ல படிப்பினை எனக்கு

 











 

பத்து ரூபாய் பிரியாணி



பத்து ரூபாய் பிரியாணி


 அது ஒரு மாலை வேளை, நான் எனது களைப்பை சற்று போக்கிக்கொள்ள தேனீர் கடையினை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். வாகனங்கள் அங்கும் இங்கும் மக்களைச் சுமந்து சென்றுகொண்டிருக்க, நமக்கு ஏதாவது சவாரி கிடைக்காதா என்று எதிர்பார்ப்புடன் Taxi ஓட்டுனர் ஒருவர் தனது காரின் முன்னே அமர்ந்திருந்தார். அந்த வழியாக தலையில் கூடையுடன் முதியவர் ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். Taxi ஓட்டுனர் அந்த முதியவரைப் பார்த்து : என்ன இன்னிக்கி நடந்து போரீரு? என்று கேட்க, பதிலுக்கு அந்த முதியவர் : பத்து ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன் என்று சொன்னார். இந்த பதில் எனது காதில் விழுந்தபோது எனக்கு சற்று குழப்பமாயிருந்தது. Taxi ஓட்டுனரின் கேள்விக்கும் இந்த முதியவரின் பதிலுக்கும் பொருத்தமில்லையே என நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது. அந்த முதியவர் தொடர்து, கையில பத்து ரூபா இருந்திச்சி வேலையை முடிச்சிட்டு (கூலி வேலை) அப்படியே பத்து ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன், வயிறு நிறைஞ்சிட்டு, வீட்டுக்கு கால் நடையா நடந்து போறேன் என்று சொன்னார். அந்த முதியவரின் பதில் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.

 வாழ்க்கையினால் வாழ்வோருக்கு பாடம் புகட்டும் இந்த முதியவர் எத்தனை பெரிய மனிதர்?

டிராபிக் போலீசுக்கு டாட்டா



டிராபிக் போலீசுக்கு டாட்டா



11 டிசம்பர் 2011. அலுவலக வேலையாக சிவகாசி சென்றிருந்த நான், அங்கு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஸ்ரீநிவாசா லாட்ஜ்-ல் தங்கியிருந்தேன். அன்று மாலை என்னைக் காண வந்திருந்த, சிவகாசியைச் சேர்ந்த தம்பி கிங்ஸ்லி உடன் எனது அலுவலகப் பணியினைத் தொடர இரு சக்கர வாகனத்தில் லாட்ஜ்-ல் இருந்து சென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும் மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு இடம். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் வாகனப் போக்கு வரத்தினை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் சென்ற சாலைக்கு 'நில்' என்ற உத்தரவு கிடைக்க, நாங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்துக்கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு சிறுவன், தவறுதலாக சற்று முன்னே சென்று வாகனத்தை நிறுத்தினான். அவனிடம் ஓட்டுநர் உரிமம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனைக் கண்ட காவலர் அவனது தவற்றிற்காக, அவனது பைக் சாவியை எடுத்துவைத்துக்கொண்டு, சற்று ஒரமாக நிற்கும்படி அவனைச் சொல்லிவிட்டு, மீண்டும் தனது போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த சிறுவன் தான் ஓட்டிச் சென்ற பைக்-ஐ ஏறக்குறைய பத்து அடி தூரத்திற்கு உருட்டிச் சென்று, ஓரத்தில் நின்று தனது பேன்ட் பாக்கெட்-ல் அவன் வைத்திருந்த பைக்கின் மற்றொரு சாவியினை எடுத்து, ஸ்டார்ட் செய்து சென்றுவிட்டான்ளூ எத்தனை புத்திசாலிச் சிறுவன். இதற்குத்தான் மாற்றுச் சாவியினை எப்போதும் தனது பையில் வைத்திருந்தானோ. திரும்பிப் பார்த்த காவலருக்கு அதிர்ச்சிதான், ஆனாலும் தான் ஏமாந்துவிட்டதை அவர் காட்டிக்கொள்ளவில்லை. 

நான் காந்தி !!!


நான் காந்தி !!!



ஹவுரா ஸ்டேஷனிலிருந்து சென்னைக்கு குடும்பமாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வயதே ஆன எனது மகன் இரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் ஓடி ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தான். அவனது சேட்டைகளும், குறும்புகளும் அங்கிருந்தவர்களுக்கு ரசனையாகிக்கொண்டிருந்தன. பலர் எங்களிடம் பேசிப் பழகுவதற்கு எங்களது மகனின் நடவடிக்கைகள் காரணங்களாயமைந்தன. அப்பொழுது ரயில் ஒரிசா மாநிலத்தினுள் பயணித்துக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் ஒரிசா மாநிலத்திலுள்ள ஓர் இரயில் நிலையத்தில் ரயில் நின்றது. இரயில் நின்றதும் பயணிகள் அங்கும் இங்கும் இறங்கி பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். இரவு நேர உணவை இரயில் பிளாட்பாரத்தில் வியாபாரிகள் பலர் கூவிக் கூவி விற்றுகொண்டிருந்தனர். சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் இரயில் புறப்படத் தொடங்கியது. அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியில், எங்கள் இருக்கையின் எதிர் இருக்கையில் புதிதாக அந்த நிலையத்தில் ஏறிய ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஏறக்குறைய நாற்பத்திரண்டு வயதிற்கான தோற்றம்ளூ சுடிதார் உடை, கையிலே ஒரு சிறிய அலுவலகம் செல்லும் பெண்களுக்கான கைப்பை. ஏறிய அப்பெண் எதிர் இருக்கையில் உட்கார்ந்ததும், உணவு பரிமாறும் ஒரு மனிதனை அழைத்தார்ளூ ஏதேதோ வேகமாக பேசினார். ஹிந்தி மொழியினை நான் அறிந்தவன் என்றபோதிலும் அவர்களது வேகமான உரையாடல்களை எனது காதுகள் உற்றுக்கவனிக்க இயலாத நிலை. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ஒரு கப்-ல் டீ கொண்டு வந்து தரப்பட்டது. அதற்கு அவர் எந்தப் பணமும் செலுத்தவில்லை. ஒருவேளை கடைசியாகக் கொடுப்பார் என நான் அதனை பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் எனது மகனின் விறுவிறுப்பான குறும்புகள் அவரையும் எங்களிடம் பேசவைத்தது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற அந்தப் பெண்ணின் சுருக்கமான கேள்விக்கு எங்களது உத்தரைவைச் சொல்லி முடித்தபின்னர், நாங்கள் கேட்காமலேயே தன்னை யார் என்று அவர் அறிமுகப்படுத்தினார். தான் இரயில்வேயில் பணி செய்வதாகவும், இரயிலில் கொடுக்கப்படும் உணவுகளை பரிசோதிப்பது தனது கடமை எனவும், தான் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுளைக் கண்காணிக்கும் பரிசோதகர் எனவும் அவர் அறிமுகம் செய்துகொண்டார். பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவினை பரிசோதிக்கவேண்டியவருக்கு, விசேஷித்த உணவு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதை அப்போது நாங்கள் உணர்ந்துகொண்டோம். 

அப்போது காய்ந்துபோய்க் கிடந்த எங்கள் காட்டிலும் மழை பெய்தது. எனது மகன் டீ வேண்டும் என கேட்களூ நான் டீக்காரனைக் கூப்பிட விழைந்தேன். உடனே அவர் 'ஆப் ருக்கியே மை புலாத்தாஹு'  (பொறுங்கள் நான் கூப்பிடுகின்றேன்) என்று அவரே கூப்பிட்டு டீ கொண்டுவரச் சொன்னார். அதனைக் குடித்த எங்களுக்கு அதிர்ச்சி அத்தனை நலமாகப் போடப்பட்டிருந்தது அந்த டீ. வெண்ணீருக்கு ஐந்து ருபாய் கொடுத்து தொண்டையை ஏமாற்றிக்கொண்டு வந்த எங்களுக்கு சந்தோஷமாயிருந்தபோதிலும், ஏன் இந்த நிலை என நினைக்குங்கால் சங்கடமாகவும் இருந்தது. ஒரே இரயிலில் பயணிகளுக்கு வேறு பரிசோதகர்களுக்கு வேறா? இத்தனை பாரபட்சம் ஏன்? மற்ற பயணிகளும் மனிதர்கள் தானே! என்ற நினைவலை என்னில் ஓடத்தொடங்கியபோதுளூ எனக்கு நினைவு வந்தது காந்தியின் தென் ஆப்பிரிக்க இரயில் பயணம். 

பிராந்திக் கட எங்க இருக்கு?


பிராந்திக் கட எங்க இருக்கு? 



2011ம் ஆண்டு மே 5, இரவு 8:35 மணிளூ அலுவலகப் பணியினிமித்தம் சிவகாசி வந்திருந்த நான், நாள் முழுக்க பணியினை முடித்து, தங்கியிருந்த விடுதி நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சிறிது தூரம் வந்ததும்? சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னை நோக்கி கையசைப்பது தெரிந்தது? ஏறிட்டுப் பார்த்தேன், என்றபோதிலும் நான் அறியாத நபர் அவர்ளூ யாரையோ அழைக்கிறார், என்னை அல்ல என முன்னேறினேன். கடந்து செல்ல முயற்சித்த என்னை மீண்டும் கை அசைத்துளூ 'தம்பி கொஞ்சம் வாங்க' என்றார். மேலாடை இல்லாத அறையாடை, இடுப்பிலே இறுக்கிக்கட்டிய சாரம், கையிலே தொங்கும் சுருட்டப்பட்டிருந்த துணிப்பை அதன் உள்ளே சில்லறைகள் சிணுங்கும் சத்தம், பாதத்தில் பழமையான செருப்பு, அவர் உழைத்து வந்த மனிதன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நானா! என்ன வேண்டும்? என கேட்க, அவர் என் அருகிலே வந்து காதருகே 'பிராந்திக் கட எங்க இருக்கு' என கேட்டார். இறைத் தொண்டன் என்னிடத்தில், கறை படிய வழி கேட்டும் மனிதனை நினைத்து நொந்துகொண்டேன். 'நான் சிவகாசிக்குப் புதுசு, பிராந்தி கட தெரியாது, நான் குடிக்கிறவனுமல்ல, நீங்க குடிக்காதீங்க ஐயா' என்ற எனது வார்த்தைகளைக் கேட்டபோது, அவரது இமைகள் சுருங்கின வெட்கமாய்ச் சிரித்தார், அப்போது முன்னிரண்டு உடைந்த பற்களுக்கு இடையே வெளியே வந்தது அவரது நாக்கு. அவர் என்னை மதிப்பதை உணர்ந்தேன், ஆனாலும் அவரை மறித்து நிற்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். இரண்டடி முன்னேறினேன் அதற்குள் அவர் இன்னொருவரிடம் 'பிராந்திக் கட எங்க இருக்கு?' என்ற அதே கேட்வியைத் தான் மீண்டும் கேட்டார் என்பதை, அந்த மனிதன் கைகாட்டி வழிகாட்டி அனுப்பிவைத்ததைக் கண்டு புரிந்துகொண்டேன். அத்தனை நெருக்கமான மக்கள் கூட்டம், அங்கும் இங்கும் அவசர அவசரமாய் போய்க்கொண்டிருக்க, என்னைப் பார்த்து ஏன் இப்படி?... என்ற கேள்வி ஒருபுறம் மனதில் எழும்ப. அலுவலக வேலையினால் அலுத்து, தள்ளாடி நடந்திருப்பேனோ, நான் எப்படி அவரது பார்வையில்.... குழப்பமான உணர்வு எனக்கு உண்டாக விடுதி நோக்கி நடந்தேன்ளூ அவர் வீடு சேர்ந்திருப்பாரா அல்லது வீதியில் கிடப்பாரா? என்ற கேள்விக்கு விடை இல்லை என்னிடத்தில்......